தூத்துக்குடி: சட்ட விரோதமாக கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற போதைபொருள் கடத்தல் கப்பலை இந்திய கடற்படையினர் சிறை பிடித்தனர்.
சர்வதேச கடல் எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் வைபவ் கப்பல், சட்ட விரோதமாக கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற போதைபொருள் கடத்தல் கப்பலை சுற்றி வளைத்து பிடித்தது. இது பற்றி மேற்கொண்ட விசாரணையல், கப்பலில் இருந்தவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
கொழும்பு பதிவெண் கொண்ட அந்த கப்பலில் ஆறு பேர் இருந்ததாகவும், அவர்களிடமிருந்து 100 கிலோ ஹெராயின், ஐந்து துப்பாக்கிகள், இரண்டு சாட்டிலைட் தொலைபேசி, சிந்தடிக் கிறிஸ்டல் மெத்தலின் எனும் போதைப்பொருள், ரூ. 500 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும், அந்த கப்பல் பாகிஸ்தான் நாட்டின் கராச்சியிலிருந்து இலங்கை துறைமுகம் வழியாக தூத்துக்குடி கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற போது இந்திய கடற்படையினரால் கைது சிறைபிடிக்கப்பட்டது.
நவம்பர் 17ஆம் தேதியே சிறைபிடிக்கப்பட்ட இந்த கப்பல், மோசமான கடல் வானிலை காரணமாக கரைக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுவதாக கடற்படையினர் தெரிவித்தனர். எனவே, சிறைபிடிக்கப்பட்ட கப்பலை பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரும்பொருட்டு இந்திய கடற்படைக்கு சொந்தமான வைபவ், விக்ரம், சமர், அபிநவ், ஆதேஷ் ஆகிய கப்பல்களும் டோர்னியர் விமானமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.