தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள வ.உ.சி. மார்க்கெட் மிகவும் பழமைவாய்ந்தது. இங்கு காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகள், மீன் கடைகள், பழைய இரும்புச் சாமான்கள் மற்றும் தையல் தொழில் கடைகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையான பொருள்களை விற்கும் அனைத்து விதமான கடைகளும் இங்கு செயல்பட்டுவருகின்றன.
இந்த மார்க்கெட்டில் செயல்படும் கடைகளிடம் வாடகை வசூலிக்க ஒவ்வொரு ஆண்டும் ஏல முறையில் மாநகராட்சி நிர்வாகம் அனுமதியளித்து வந்தது. தற்போது தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.
அதில் ஒருபகுதியாக நாளை முதல் வ.உ.சி மார்க்கெட்டில் இதுவரை நடைமுறையில் உள்ள வாடகை வசூலிக்கும் ஆணையை ரத்துசெய்து, மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக வாடகை வசூலிக்கப்போவதாக அறிவித்தது.
மேலும் தற்பொழுதுவரை வசூலித்துவரும் வாடகையை விட பல மடங்கு உயர்த்தி அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து வியாபாரிகள் புதிய வாடகை பட்டியலை வெளியிட்டதற்குக் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அனைத்து வியாபாரிகளும் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி நிர்வாகம் புதிய வாடகை திட்டத்தைக் கைவிட்டு பழைய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கணேஷ், மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் ஆகியோர் வியாபரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். தொடர்ந்து வியாபாரிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.