தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி துறையூர் கிராமத்தில் செஞ்சுரி என்ற தனியார் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையைக் கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 45 கட்டிடங்கள் உள்ளது. 130 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று (பிப்ரவரி 24)வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது பேன்சி ரக பட்டாசுகளுக்கு மருந்து கலவை நிரப்பும் இடத்தில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டு அந்த அறை தரை மட்டமானது.
4 பேர் பலி
இதில் அந்த கட்டிடத்திலிருந்த ராமர் , தொட்டம்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ் (47), குமாரபுரத்தைச் சேர்ந்த தங்கவேல் (43), நாலாட்டின்புதூரைச் சேர்ந்த கண்ணன் (48) ஆகிய 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து கொப்பம்பட்டி காவல்நிலையம் மற்றும் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்குப் பட்டாசு ஆலை நிர்வாகத்தினர் தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்து ,ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் அந்த கட்டிட இடிபாட்டில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்தினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ, மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், உள்ளிட்டோர் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜு, “கோவில்பட்டி அருகே துறையூரில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 4 தொழிலாளர்கள் பலியான சம்பவம் மிகவும் வருத்தத்திற்குரியது.விபத்தில் பலியான தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசுக்கு இதனைக் கொண்டு செல்ல வேண்டுமென்று மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை வைத்துள்ளேன்.
நிவாரண நிதி
விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்குத் தமிழ்நாடு அரசு உடனடியாக நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு முதலமைச்சருக்குக் கோரிக்கை வைக்கிறேன். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறேன்.
இப்பகுதியில் தீப்பெட்டி தொழிலாளர்கள் பட்டாசுத் தொழிலாளர்கள் என பாதுகாப்பு இல்லாத அபாயகரமான தொழிலைச் செய்து வருகிறார். கடந்த அதிமுக ஆட்சி பட்டாசுத் தொழிலாளர்கள் நல வாரியம் அமைத்து ஒரு ஆண்டு காலம் ஆகி உள்ளது இதன் காரணமாக குடும்பத்திற்குக் காப்பீடு தொகை நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது இருந்தபோதிலும் உடனடியாக அரசு நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க:தூத்துக்குடி எஸ்பி சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றம்