தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்திருப்பதாக கழுகுமலை காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது கழுகுமலை அண்ணா புதுத் தெருவைச் சேர்ந்த சுரேஷ் கண்ணன் (27) என்பவரது வீட்டருகே உள்ள குடோனைச் சோதனை செய்தனர்.
அப்போது அதில் 16 மூட்டைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் சுரேஷ் கண்ணனை விசாரணை மேற்கொண்டதில் அவர் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக அவரது குடோனில் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
இது குறித்து கழுகுமலை காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் கண்ணனை கைதுசெய்தனர்.
அவரிடம் இருந்த ரூ.5,00,000 மதிப்பிலான 437 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல்செய்தனர்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"இந்தாண்டு இதுவரை அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்து 685 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 687 குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிமிருந்து 3800 கிலோ புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுவரை 77 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதில் எட்டு பேர் புகையிலை, கஞ்சா விற்பனை, கடத்தல் வழக்கில் ஈடுபட்டவர்கள்.
எனவே இதுபோன்ற புகையிலைப் பொருள்கள், கஞ்சா போன்றவற்றை விற்பனை, கடத்தலில் ஈடுபடுவோர்கள், சட்டவிரோதமாக கள் இறக்குவது, சாராயம் காய்ச்சுவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்படுவார்கள்" எனக் கூறினார்.