மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக இன்று வந்திருந்தார். தொடர்ந்து சாமி தரிசனத்திற்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது," ராகுல் காந்தியை பிரதமராக அறிவித்ததை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. காங்கிரஸ், திமுக கூட்டணி குறித்து திமுகவிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.10 சதவீத இட ஒதுக்கீட்டை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொண்டு பயன் பெற்று வருகின்றனர். கஷ்டப்படுகிற மக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும், ஏழை மக்களும் பயன்பெற்று வருகின்றனர். இதை யாரும் மறுக்க முடியாது. இட ஒதுக்கீட்டை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் புரிந்துகொள்ளவில்லை.
தேர்தல் சமயத்தில் திமுகவினர் ஆன்மிகவாதிகளாக மாறிவிட்டனர். முதலில் நீங்கள் நீங்களாக இருங்கள். கருத்துக் கணிப்புகள் யாவும் கருத்துக்கணிப்புகள் அல்ல.. கருத்துத் திணிப்புகள். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் மிகச்சிறப்பு வாய்ந்த பட்ஜெட் ஆகும். பட்ஜெட்டுக்கு முன்னர் பாஜக தமிழகத்தில் 30 இடங்களில் வெற்றி பெறும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் பட்ஜெட்டிற்கு பிறகு தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ஆட்சியில் பாமரனுக்கும் சென்று சேரும் வகையில் நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் எதிர்க்கட்சியினர் இதை தடுக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் என்பது நாட்டு மக்களுக்காக போடப்பட்ட பட்ஜெட். ஆனால் நாட்டு மக்களைச் சுரண்டிய கட்சி காங்கிரஸ் கட்சி.
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.எஸ்.அழகிரிக்கு எனது வாழ்த்துக்கள். தமிழகத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி பலம் பொருந்திய கூட்டணியாக அமையும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.