தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதாயாத்திரையாக வந்தனர். தைப்பூசத்தை முன்னிட்டு இன்று (ஜனவரி 28) அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.
தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, ராஜபாளையம், கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் காவடி தூக்கியும், அலகுவேல் குத்தியும் பாதயாத்திரையாக வந்து கோயிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் பெண் பக்தர்கள் உள்பட ஏராளமானோர் கோயில் பிரகாரத்தில் அங்கப்பிரதட்சம் செய்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். இதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி சுமார் ஐந்து மணிநேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர்.
இந்தாண்டு முதல் தைபூசத்திற்கு அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தைப்பூசத் திருவிழாவுக்கு வந்திருக்கும் பக்தர்களின் வசதிக்காக கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோயில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் வந்து செல்வதற்காக ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.