தூத்துக்குடி மாவட்டம் டூவிபுரத்தைச் சேர்ந்த நண்பர்களான லட்சுமணன் (28), ராஜகோபால் நகரை சேர்ந்த யமஹா முருகன் (30). இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்துவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த வாரம் இருவரும் மது அருந்தும் போது இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது லட்சுமணன், முருகனை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன் அவரை பழிதீர்க்க திட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து முருகன் தனது நண்பர்களான தங்கராஜ், கண்ணபிரான் ஆகியோருடன் சேர்ந்து லட்சுமணனை மது அருந்துத அழைத்துச் சென்றுள்ளனர். லட்சுமணன் போதையில் இருந்தபோது வலது கையை அரிவாளால் வெட்டினர் இதில் வட்சுமணனின் கை துண்டானது.
இதையடுத்து லட்சுமணன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் குற்றவாளிகளை பிடிக்க துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில் குழு அமைத்து தேடி வந்தனர்.
சிப்காட் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் தூத்துக்குடி கே.வி.கே. நகரில் குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அவர்களை சுற்றி வளைத்து கைது செய்ய முயற்சித்தனர்.
காவல்துறையினரை கண்டதும் முருகன் உள்பட மூன்று பேரும் சுவர் ஏறி குதித்து தப்பி ஓட முயன்ற போது தவறிவிழுந்து மூவருக்கும் கை, கால் எலும்புகளில் முறிவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து முருகன், கண்ணபிரான், தங்கராஜ் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: லஞ்சம் கொடுக்க மறுத்ததால் அவதூறாக பேசிய விஏஓ - தாராபுரம் விவசாயி புகார்