இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 649ஆக உயர்ந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்தத் தொற்றால் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தொற்று பரவுதலைத் தடுக்க தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
முதலமைச்சர் பழனிசாமி நேற்றிரவு தொலைக்காட்சியின் வாயிலாகக் கரோனா குறித்து எடுத்துரைத்தார். இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் காரணமாக இன்று 17 பேர் சிகிச்சைக்காக வந்திருந்தனர்.
இவர்களில் மூன்று பேருக்கு கரோனா தொற்று அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் சந்தேகித்தனர். அதனடிப்படையில் மூவரும் கரோனா வார்டுக்கான தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டுவருகிறது. அதனை உறுதிசெய்வதற்காக அவர்களது ரத்த மாதிரி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலும், தனிவார்டில் சிகிச்சைப் பெற்றுவரும் மூவரில் ஒருவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர், மற்ற இருவரும் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் தட்டுப்பாடின்றி பால் விநியோகம் - ஆவின்