தூத்துக்குடி: ஹார்பர் எஸ்டேட் பகுதியில் டீனோஸ் லோகநாதன் மற்றும் அவரது சகோதரரான அரிஸ்டோ லோகநாதன் ஆகியோர் ‘ஆர்னி என்ஜினியரிங் டெக்’ என்ற தனியார் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த தூத்துக்குடி ஸ்பிக் நகரைச் சேர்ந்த ஜோதி மகன் சிவசந்திரபோஸ் (37) என்பவரை முறைகேடு காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு மேற்படி டீனோஸ் லோகநாதன் அவரை வேலையிருந்து நீக்கியுள்ளார்.
பின்னர் தங்கள் நிறுவனத்தில் தூத்துக்குடி போல்பேட்டை பகுதியைச் சேர்ந்த மந்திரம் மகன் பாக்கியராஜ் (38) என்பவரை எச்.ஆர் மேலாளராகவும், தூத்துக்குடி கிரேஸ் நகரைச் சேர்ந்த பால்வண்ணன் மகன் செல்வகுமார் (30) என்பவரை துணை மேலாளராகவும் பணியில் சேர்த்ததையடுத்து அவர்கள் அந்நிறுவன கணக்குகளை முழுமையாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் மேற்படி தனியார் நிறுவனத்தில் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான நிறுவன கணக்குகளை ஆடிட்டர் தணிக்கை செய்தபோது, கணக்குகள் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை என தெரியவந்ததன் அடிப்படையில் ஆவணங்களை சரிபார்த்தனர்.
அப்போது, மேற்படி பணி நீக்கப்பட்ட சிவசந்திரபோஸ், பணியிலிருக்கும் பாக்கியராஜ் மற்றும் செல்வகுமார் ஆகியோருடன் கூட்டுச்சதி செய்து கே.வி.எம் எண்டர்பிரைசஸ் மற்றும் வேதர்சனா என்ற நிறுவனங்களின் பேரில் உள்ள வங்கி கணக்கிற்கு ரூபாய் 12லட்சத்து 58ஆயிரத்து 705 ரூபாய் பணத்தை மேற்படி டீனோஸ் லோகநாதன் நிறுவனத்தின் வங்கி கணக்கிலிருந்து அனுப்பியது தெரியவந்தது.
பின்னர் விசாரித்தபோது மேற்படி நிறுவனங்களின் பெயரில் நிறுவனங்கள் எதுவும் செயல்படவில்லை என தெரியவந்துள்ளது. மேலும், குற்றம்சாட்டப்படுபவர்கள் அந்நிறுவனத்தின் வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 49லட்சத்து 70ஆயிரம் பணத்தை ஜே.எம் எர்த் மூவர்ஸ் என்ற நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு மாற்றி, அதிலிருந்து மேற்படி பணத்தை தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் வங்கி கணக்கிற்கு மாற்றி மொத்தம் ரூபாய் 62லட்சத்து 28ஆயிரத்து 705 பணத்தை மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளரான டீனோஸ் லோகநாதன் என்பவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிவசந்திரபோஸ், பாக்கியராஜ் மற்றும் செல்வகுமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வயதான தம்பதி கொடூரமாக கொலை: நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பலுக்கு போலீஸ் வலை!