ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாத யாத்திரையாக வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்து அலகு குத்தி, அங்கபிரதட்சணம் செய்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
திருச்செந்தூர் கடற்கரையே தெரியாத அளவிற்கு, குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 3.30 மணியளவில் விஸ்வரூப தீபாராதனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேக தீபாராதனையும் பின்னர் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சுவாமி அலைவாயுகந்த பெருமான் தங்க சப்பரத்தில் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழா ஏற்பாடுகளை தக்கார் ரா.கண்ணன் ஆதித்தனர் மற்றும் செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்தனர். தைப்பூச விழாவையொட்டி, பாதுகாப்பு பணியில் நூற்றுக்கு மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
முருகப் பெருமானின் தைப்பூச திருவிழாவால் திருச்செந்தூரே திருவிழாக் கோலம் பூண்டது.
இதையும் படிங்க :'கட்டண தரிசனத்திற்கு மட்டும் லட்டு பிரசாதமா' - திருச்செந்தூரில் கேள்வி எழுப்பிய பக்தர்கள்