தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி தொடர் மழை, வெள்ளம், புயல் ஆகியவற்றால் பாதிப்பு ஏற்பட்டால், நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக மாவட்டத்தின் முக்கிய இடங்களில் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
ஒவ்வொரு குழுவிலும் பேரிடர் மீட்பு படையில் பயிற்சி பெற்ற வீரர்கள் தலைமையில் தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர், தூத்துக்குடி ஆயுதப்படை காவலர்கள் மற்றும் அந்தந்த பகுதிகள் குறித்து நன்கு தெரிந்த உள்ளுர் காவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். இந்த பேரிடர் மீட்புக் குழுவில் இயந்திர விசையுடன் செல்லக்கூடிய படகுகள், விளக்குகள், வலுவான தூக்குப்படுக்கைகள், முதலுதவி பெட்டி உள்பட 24 வகை உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.
இதனிடையே, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்களுக்கு ஆலோசனை கூறினார்.
மேலும், அவசர உதவிக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண் 100 அல்லது குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் வசதியுடன் கூடிய ‘ஹலோ போலீஸ்' 95141 44100 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிவுறுத்தினார்.