தூத்துக்குடி: மத்தியபாகம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தவர், பொன் மாரியப்பன். இவர் கடந்த 2021, மே 9 அன்று மத்தியபாகம் காவல் நிலையத்தில் உடல்நிலை சரியில்லை என்று காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் பிணி அறிக்கை செய்து, பிணிக் கடவுச்சீட்டு வாங்கிக் கொண்டு சென்றுள்ளார்.
பின், அதே நாள் இரவு தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருடன் சேர்ந்து தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்தவரான லூர்து ஜெயசீலன், தனது தாய்மாமனை கொலை செய்ததற்கு பழி தீர்ப்பதற்காக அவரைக் கொலை செய்துள்ளார்.
பின்னர் அப்போதைய மாவட்ட எஸ்.பி குற்றவாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். போலீஸ் தனிப்படை நடத்திய விசாரணையில், கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த பல கொலை வழக்குகளில் தொடர்புடைய மோகன்ராஜை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், பொன் மாரியப்பன் கூறியதன் பேரில் லூர்து ஜெயசீலனை கத்தியால் குத்தி கொலை செய்ததாக மோகன்ராஜ் கூறினார். இதனையடுத்து, அதற்கு மறுநாள் (2021, மே 10) அன்று பொன் மாரியப்பன், மோகன்ராஜ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். பின் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நடுவர் உத்தரவின்படி கடந்த 2021, மே 5 அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் மீது துறை ரீதியாக நடைபெற்ற விசாரணையில், தலைமைக் காவலர் மீதான குற்றம் நிரூபணம் ஆனது. பின்னர், இருவரும் தூத்துக்குடி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து ஒழுக்கமும், கட்டுப்பாடும் நிறைந்த காவல் துறையின் கட்டுக் கோப்பை சீர்குலைத்து பொதுமக்களின் மத்தியில் காவல் துறையின் மேல் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயல் புரிந்துள்ள தலைமைக் காவலர் பொன் மாரியப்பனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் பணியில் இருந்து நீக்கம் (Dismissed from Service) செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: விநாயகர் ஊர்வலத்தில் விதிமுறை மீறல்... ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்த போலீசார்!