கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கால் வேலையின்றி பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பொருட்டு, தூத்துக்குடி மாவட்ட காவல் துறையின் சார்பில் காய்கறி, அரிசி தொகுப்பு வழங்கப்பட்டது.
குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரண தொகுப்புகளை வழங்கினார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, 'தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு விதிகளை மீறியதாக கடந்த இரண்டு நாட்களில் 904 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 21 ஆட்டோக்களும், 4 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
மாவட்டம் முழுவதும் 64 இடங்களில் வாகனத் தணிக்கை செய்யப்படுகிறது.
ஊரடங்கு விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களாக முழு ஊரடங்கு பின்பற்றப்படுவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று குறைய ஆரம்பித்துள்ளது. எனவே, தேவை இன்றி மக்கள் ஊரடங்கு சமயத்தில் வெளியே வருவதைத் தவிர்த்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்' என்றார்.