கரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பல்வேறு வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துவருகின்றன. இந்நிலையில், உலக நாடுகள் தொடங்கி உள்ளூர் வரையில், என்னென்ன நிலவரம் என்பதை மக்களிடம் கொண்டுசேர்ப்பதில் ஊடகங்கள் முக்கியப் பங்காற்றிவருகின்றன.
தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ முடிவை அறிவிப்பதிலும், ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்களை வெளியிடுவதிலும் ஊடகங்கள் முன்னிலையில் இருக்கின்றன. தொலைக்காட்சி வாயிலாகவும், செய்தித்தாள் வாயிலாகவும் தகவல்களைத் தெரிந்து கொள்பவர்களின் எண்ணிக்கை, முன்பைவிட இருமடங்காக அதிகரித்துள்ளது.
இக்கட்டான இச்சூழலில், வீடற்றோர், தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத குடும்பத்தினர் கரோனா குறித்த செய்திகளைத் தெரிந்துகொள்ள, வானொலிகளையே சார்ந்திருக்கின்றனர்.
வானொலிகளின் இயங்குமுறைகள்
வானொலி நிலையங்களைப் பொறுத்தவரை, நாடு முழுவதும் 'தூர்தர்ஷன்' பிரிவில் 'அகில இந்திய வானொலி நிலையம்' என்னும் பெயரில் அதிகாரப்பூர்வ வானொலி நிலையங்களை மத்திய அரசு நடத்திவருகிறது. இதுதவிர, பல தனியார் நிறுவனங்களும் வானொலி பண்பலை நிறுவனங்களை நடத்திவருகின்றன.
தற்போது, அரசின் முடிவுகளை மக்களுக்கு அறிவிப்பதிலும், சரியான தகவல்களைச் சேர்ப்பதிலும் ஊடகங்களைப் போல வானொலிகளும் விரைந்து செயலாற்றிவருகின்றன. இந்நிலையில், நிர்வாகம், தகவல் ஒலிபரப்பு காரணங்களுக்காக தூத்துக்குடியை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் அகில இந்திய வானொலி நிலைய சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இது வானொலி பிரியர்களிடையே, பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட அகில இந்திய வானொலி நிலையமானது, அம்மாவட்டத்தினை மையமாகக் கொண்டு எம்.வி.1053 கே.ஹெச்.இசட். அலைவரிசையில், வானொலி சேவையை வழங்கிவந்தது. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களையும் தாண்டி அந்தமான் நிகோபார் தீவு வரையிலும் தன்னுடைய வானொலி அலைவரிசை சேவையினை வழங்கிவந்தது.
ஊரடங்கு உத்தரவையடுத்து, வானொலி நிலைய செயல்பாடுகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தகவல் ஒலிபரப்பு, நிர்வாக காரணங்களுக்காகத் தூத்துக்குடி வானொலி நிலையம் தனது சேவையை நிறுத்தியிருப்பது, மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை உண்டாக்கியுள்ளது.
பேரிடர்களில் வானொலிகளில் பங்கு
தமிழ்நாட்டில் ஏற்பட்ட கஜா புயல் தாக்கத்தின்போது தூத்துக்குடி வானொலி நிலையம் அரசின் நிவாரண நடவடிக்கைகள், அரசு திட்டங்கள் உள்ளிட்டவற்றை மக்களிடையே பரப்பியதில் முக்கியப் பங்காற்றியது. தற்போதும், அதுமாதிரியான ஒரு இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வானொலி சேவையை நிறுத்தியது ஏற்கத்தக்கதல்ல என மக்கள் தெரிவித்துள்ளனர்.
வானொலியின் சேவை ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
வீட்டில் தொலைக்காட்சி இல்லாதவர்கள், அன்ன சத்திரங்களில் தங்கியிருப்போர், சமூக நலக்கூடங்கள், தனியார் காவலாளிகள், இலவச தங்குமிடங்கள், பொது சேவை வழங்குமிடங்கள், ஆட்டோக்கள், கார் பயன்படுத்துவோர் உள்பட அனைத்து சமூகத்தினரிடமும் தனக்கான இடத்தை வகுத்துவைத்திருக்கும் தூத்துக்குடி வானொலி சேவை. இந்நேரத்தில் மக்கள் பணிசெய்ய வேண்டும் என்றே பொதுவெளி சமூகத்தினர் கோரிக்கைவிடுக்கின்றனர்.
இந்நேரத்தில் வானொலி, தனது சேவையை தொடராமல் நிறுத்தியிருப்பது மக்களிடையே தனக்கென ஏற்படுத்தி வைத்திருக்கும் தனித்துவத்தை தானே விட்டு கொடுப்பதற்கு ஒப்பாகும். அரசின் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை, நலன்விரும்பும் நடவடிக்கைகளை நாள்தோறும் விழிப்புணர்வாக ஒலிபரப்பு செய்வதில் என்ன சிரமம் ஏற்படப்போகிறது. கரோனா தடுப்புப் பணியில் வானொலியை விழிப்புணர்வுப் பணிக்காகப் பயன்படுத்துவதோடு, நலம் பயக்கும் வகையில் பல்வேறு ஆக்கப்பூர்வ முயற்சிக்காகவும் பயன்படுத்த முடியும்.
ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள்
- 144 தடை உத்தரவு காரணமாக, மன அழுத்தத்துக்குள்ளாகி, மருத்துவரிடம் செல்ல இயலாதவர்களின் நலனுக்காக வானொலிகள் மூலமாக இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கலாம்.
- கரோனா தடுப்புப் பணியில் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளை சித்திரித்து வீண் வதந்திகள் பரப்பப்படும் நிலையில், கரோனாவுக்கு எதிரான அரசின் ஒவ்வொரு செயல்திட்ட விளக்கங்களையும் வானொலி மூலமாக மக்களிடையே சென்று சேர்க்கலாம்.
- அதிக நேயர் விருப்பம் கொண்ட நிகழ்ச்சிகள் மூலமாக, தடுப்பு நடவடிக்கைகளை நயத்துடன் எடுத்துக்கூறலாம். நாட்டுப்புறக் கலைகள் வாயிலாக, விழிப்புணர்வுப் பணிகளை வானொலி மூலமாகப் பரப்புரை செய்யலாம். இதனால், நலிந்த கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து உதவிபுரிந்திட முடியும்.
பாரதப் பிரதமரின் 'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு எழுந்துள்ள நிலையில், தூத்துக்குடி வானொலி சேவை நிறுத்தப்பட்டது, பல்வேறு வகையிலும் அரசுக்குப் பின்னடைவையே கொண்டுசேர்க்கும்.
திரைக்கடல் ஆடிவரும் தமிழ்நாதத்தை, தூத்துக்குடி மக்கள் திரவியமாக அள்ளிப்பருகுவது கூடிய விரைவில் நடக்குமா என்பதற்கு அரசே பதில் சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க: என்95 முகக் கவசங்களை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தலாம்!