அரசு கிராம சுகாதார செவிலியர் மற்றும் பொதுசுகாதாரத் துறை செவிலியர் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்துநிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை திட்டத்தினை எளிமைப்படுத்த வேண்டும், மகப்பேறு உதவித் திட்டத்தில் ஏற்படும் காலதாமதத்தை குறைக்க வேண்டும், வி.ஹெச்.என்., எஸ்.ஹெச்.என். ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், வி.ஹெச்.என். செவிலியர் மிரட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 200க்கும் மேற்பட்ட செவிலியர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் குறித்து பொதுத்துறை செவிலியர் கூட்டமைப்புத் தலைவர் ராஜலட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில் ”டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை திட்டத்தின் கீழ் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுவருகிறது. இதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களால் உதவித்தொகை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. காலதாமதத்தை சரிசெய்து அனைத்தையும் கணினிமயப்படுத்த வேண்டும்.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை என்றாலோ, ஊட்டச்சத்துப் பொருள்கள் அடங்கிய பரிசுப்பெட்டகம் கிடைக்கவில்லை என்றாலோ சம்பந்தப்பட்ட வி.ஹெச்.என். செவிலியரைப் பணியிடை நீக்கம் செய்வது, மிரட்டுவது, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அலுவலர்கள் செய்கின்றனர்; அவை நிறுத்தப்பட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: 'விருதுநகரில் சிதிலமடைந்து காணப்படும் புதிய பேருந்து நிலையம்' #Exclusive