தூத்துக்குடியில் நூலகம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட கட்டடங்கள் சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு, நேற்று திமுக எம்எல்ஏ கீதாஜீவன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.
பின்னர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அவசியமாக இருந்தது. இதனைப்பற்றி நோயாளிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர். இதனால் ரூ.17.50 லட்சம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்புத் திட்டங்கள் அரசு மருத்துவமனையில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குடிநீர், குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுக்கும், புற்று நோயாளிகள் சிகிச்சைப் பிரிவுக்கும் கிடைக்கும்படி வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் தூத்துக்குடி மாவட்ட சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ10 லட்சம் மதிப்புள்ள புதிய நூலகம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகள் அடிப்படையில் நல உதவித் திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்படும்' என்றார்.