தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பேயன்விளை ஏ.ஐ.டி.யூ.சி. காலனியைச் சேர்ந்தவர் சுதர்சன் செல்வபாபு. இவர் குவைத்தில் பொறியாளராகப் பணியாற்றிவருகிறார். இந்நிலையில் சுதர்சன் செல்வபாபுவின் மனைவி பேயன்விளையில் உள்ள அவர்களின் வீட்டை பூட்டிவிட்டு குழந்தைகளுடன் கடந்த 5ஆம் தேதி மாலை காயல்பட்டினம் கோமன்புதூரில் உள்ள அவரது உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் பேயன்விளையில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா இயங்காமல் இருப்பதை சுதர்சன் செல்வபாபு இணையம் வழியாகச் தெரிந்துகொண்டார். இதனால் சந்தேகமடைந்த அவர், மனைவிக்கு போன்செய்து, வீட்டில் கேமரா இயங்காதது குறித்து தகவல் கூறினார். இதைத்தொடர்ந்து அவருடைய மனைவி இன்று காலை பேயன்விளையில் உள்ள வீட்டிற்கு வந்து பார்க்கையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கேமரா வயர் அறுக்கப்பட்டு கிடந்தது.
மேலும் வீட்டு பீரோவிலிருந்த 35 ¾ பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், பேயன்விளையில் திருட்டு நடந்த வீட்டை நேரில் சென்று ஆய்வுசெய்தார்.காவல்துறையினர் நேரில் ஆய்வு சம்பவம் தொடர்பாக, ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் பாரத் மேற்பார்வையில், ஆறுமுகநேரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் செல்வி, உதவி ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க விசாரணை நடைபெற்றுவருகிறது.