தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டின் பெரும்பான்மையான இடங்களில் மழைபெய்துவருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வந்தது. தூத்துக்குடி மாநகராட்சி , புறநகர் பகுதிகளில் காலை முதல் பெய்த கனத்த மழையால் நகரின் தாழ்வான பகுதிகள், அரசு ஊழியர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பிற்கு உள்ளானது.
இந்நிலையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சாலையில் மழை நீரை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தூத்துக்குடி மாவட்டத்தில் 36 தாழ்வான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தேங்கும் மழை நீரை அகற்ற ஒருங்கிணைந்த குழு அமைக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பாக தங்கவைக்க 20 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணாநகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.