தூத்துக்குடி: கடந்த 17, 18 ஆகிய இரு தினங்கள் தென்மாவட்டங்களில் பெய்த அதிக கனமழையின் காரணமாக தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீரானது வெள்ளம் போல் தேங்கியுள்ளது. இதனையடுத்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் அரசு மின் மோட்டார்கள் மூலம் வெள்ளத்தை வெளியேற்றியும், படகுகள் மூலம் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், மழைநீரை வெளியேற்றும் பணிகளில் பல்வேறு இடங்களில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆரோக்கியபுரம், சண்முகபுரம், விவிடி பள்ளி, வட்ட கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீர் வெளியேற்றாததை கண்டித்தும், நிவாரணம் முழுமையாக கிடைக்காததை தொடர்ந்து தூத்துக்குடி - ராமேஸ்வரம் சாலையில் திடீரென பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பகுதியைச் சார்ந்த மார்டின் என்பவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக தங்கள் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அரசியல் கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் யாரும் தங்களை வந்து நேரில் சந்திக்கவோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளோ, உரிய நிவாரண பொருட்களோ வழங்க முன்வரவில்லை.
மேலும், மழைநீரை வடிய வைப்பதற்கு எந்த விதமான நடவடிக்கையும் முறையாக எடுக்கப்படாமல், கடந்த 5 நாட்களுக்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. எம்பி கனிமொழி, அமைச்சர்கள் என யாரும் இன்றுவரை எங்கள் பகுதிக்கு வந்து என்னவென்று கூட கேட்கவில்லை. ஆகவே, உடனடியாக மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும்” என்று அப்பகுதி மக்களின் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இவரைத்தொடர்ந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு நபர் சரவணகுமார், “இந்த பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் குழந்தகள் முதல் பெரியவர்கள் வரை உணவுக்கு வழியில்லாமல் உள்ளோம். குடிநீர் மற்றும் மின்சார வசதி இல்லை. எந்த அதிகாரிகளோ அரசியல் தலைவர்களோ பார்க்க வரவில்லை” எனப் பேசினார்.
இதையும் படிங்க: வெள்ளத்தால் முழ்கிய வீடு.. வேதனையிலும் பாட்னா பைரேட்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கிய தூத்துக்குடி கபடி வீரர்..!