தூத்துக்குடியில், விசைப்படகு உரிமையாளர்கள் வட்டப்பணம் ஆறு சதவீதமே மட்டுமே பிடிக்க வேண்டும்; 6 நாட்கள் கடலுக்கு தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும்; விசைப்படகு தொழிலாளர் சங்கம் மற்றும் விசைப்படகு உரிமையாளர் சங்கம் என்ற இரண்டு சங்கங்கள் மட்டுமே செயல்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு தொழிலாளர்கள் இன்றுடன் (பிப்.10) 5ஆவது நாளாக கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது சம்பந்தமாக, தூத்துக்குடி சார் ஆட்சியர் கெளரவ் குமார் தலைமையில், தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், தாசில்தார் செல்வகுமார் மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில், விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் விசைப்படகு மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் சமாதான கூட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில், விசைப்படகு தொழிலாளர்களின் கோரிக்கைகள், உரிமையாளர்களின் கோரிக்கைகள் கூட்டத்தில் பேசப்பட்டது. அந்த நேரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்ட நிலையில் கூட்டத்தை அமைதிப்படுத்த காவல் துறையினர் முற்பட்டனர். அப்போது, திடீரென தூத்துக்குடி சார் ஆட்சியர் கெளரவ் குமார் கோபத்தில் கையால் மேசையை தட்டினார். இதில், மேசையில் உள்ள கண்ணாடி சுக்கு நூறாக உடைந்தது. பின்னர், கூட்டத்தில் உள்ளவர்கள் திகைத்துப் போய் நின்றனர்.
அதன் பின்பு, கூட்டத்தில் சமாதான பேச்சுவார்த்தை எட்டப்படாத நிலையில், மீனவர்கள் கலைந்து சென்றனர். கூட்டத்திற்கு வந்த மீனவர்கள் கூறுகையில், மேல் நிர்வாகத்தில் உள்ள சார் ஆட்சியர் கூட்டத்தை சமாதானப்படுத்தி தீர்வு காண்பார் என்று நினைத்தால் கோபத்தில் கண்ணாடியை உடைத்து விட்டாரே! என்று கடந்து சென்றனர்.
இதையும் படிங்க: கண்டக்டர் ஃபிட்னஸ் தேர்வில் அதிர்ச்சி சம்பவம் - எடையை அதிகரிக்க உடலில் இரும்பைக் கட்டி வைத்த தேர்வர்கள்!