தூத்துக்குடி: மன்னார் வளைகுடா பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் தூத்துக்குடி மீனவர்களுக்கு கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், தூத்துக்குடி மீனவர்கள் சுமார் 220க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடி தடை காலம் முடிந்து கடலுக்குச் சென்றனர்.
முன்னதாக, கடல் வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப் பெருக்கத்திற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம், கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் அமல்படுத்தப்பட்டது.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம், வேம்பார் மற்றும் தருவைகுளம் ஆகிய இடங்களில் மொத்தம் உள்ள 545 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த 61 நாட்களிலும் மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைத்தல், வலைகளை சரி செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், மீன்பிடி தடைக்காலம் நேற்றைய முன்தினம் நள்ளிரவு முடிவடைந்த நிலையில், கடலுக்குச் செல்ல மீனவர்கள் தயாராக இருந்தனர். இதனிடையே, மன்னார் வளைகுடா பகுதியில் ஜூன் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து அவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
ஆனால், நேற்று (ஜூன் 15) மீனவர்கள் டீசல் நிரப்புதல், படகுகளில் ஐஸ் கட்டிகளை ஏற்றுதல், வலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றுதல் போன்ற பணிகளை மேற்கொண்டனர். இதனையடுத்து, மொத்தம் 220 விசைப்படகுகளில் தடையை மீறி மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர்.
மேலும், இது குறித்து விசைப்படகு உரிமையாளர் மனோஜ் குமார் கூறுகையில், ”தூத்துக்குடி விசைப்படகு மீனவர்களுக்கு தடைக் காலம் முடிந்து நேற்று கடலுக்குச் செல்ல வேண்டிய நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயலின் காரணமாக கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது. அதனால், நேற்று கடலுக்குச் செல்லவில்லை.
ஆனால், இன்று கடலுக்குச் சென்று இருக்கிறோம். இந்த நேரத்தில் அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம். அது என்னவென்றால், புயல் காரணமாக மீன்பிடி துறைமுகத்தில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவிப்பு பலகை வைக்கப்படுகிறது. 45, 55 கிலோ மீட்டர் காற்று அதிகமாக வீசுவதால் எங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.
இதனால் எங்களுக்கு கடலுக்குச் செல்ல அனுமதி தர வேண்டும். ஆகவே, தற்போது 220க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் சென்று இருக்கின்றன. நன்றாக மீன்களை பிடித்து வர வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்” என கூறினார்.
இதையும் படிங்க: கடற்கரைப் பகுதியில் படையெடுத்து நிற்கும் ஜெல்லி மீன்கள்; மீன்வளத்துறையினர் ஆய்வு!