தூத்துக்குடி: தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் என்பதால், தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையத்திலிருந்து தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குநருக்கு மின்னஞ்சல் வாயிலாக இந்த செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது, “ஜனவரி 2 முதல் 5 வரை உள்ள தேதிகளில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 - 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் சுழற்காற்று வீசக்கூடும். இதனால் தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2024 புத்தாண்டை முன்னிட்டு தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த மக்கள்..!
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப் படகுகள் மற்றும் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், மீனவர்கள் தங்களின் படகுகளை உயரமான மற்றும் பாதுகாப்பான முறையில் நிறுத்தி வைப்பதுடன், தங்களின் மீன்பிடி உபகரணங்களையும் பாதுகாப்பாக வைத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் தருவைக்குளத்தைச் சேர்ந்த விசைப்படகுகள், மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மீன்பிடிப்பில் ஈடுபட வேண்டாம் எனவும், இப்பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் விசைப்படகு மீனவர்கள், அருகிலுள்ள துறைமுகத்திற்கு கரை திரும்புமாறும் தூத்துக்குடி உதவி இயக்குநர் விஜயராகவன் அறிவுறுத்தியுள்ளார்.