தூத்துக்குடி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்று(ஜூலை 30) கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 65 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஆறு ஆயிரத்து 591 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது 1,578 பேர் கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐந்து ஆயிரம் பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 38 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழப்பவர்கள் 0.6 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. மாவட்ட நிர்வாகம், மருத்துவ பணிகள் சார்பில் கரோனா பரிசோதனையை மேலும் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது நாளொன்றுக்கு இரண்டு ஆயிரம் முதல் மூன்று ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கரோனா பரவல் காரணமாக 45 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி, காயல்பட்டினம், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமான நபர்களுக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நோய் பரவல் கண்டறியப்பட்ட பகுதியில் உள்ள அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
நகர்ப்புறங்களை தவிர்த்து கிராமப்பகுதிகளில் 141 இடங்களில் கரோனா பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மக்கள் நெருக்கமுள்ள நகர்புறங்களை ஒப்பிடுகையில் கிராமப்புறங்களில் கரோனா பரவல் குறைவாகவே உள்ளது.
இதுவரை 65 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. முதலமைச்சருடன் நடத்தப்பட்ட கலந்தாலோசனை முடிவுகளின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தனிக் குழு - புதுக்கோட்டை ஆட்சியர் அறிவிப்பு!