தூத்துக்குடி: எட்டயபுரம் அருகே உள்ள வெம்பூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் வேதமுத்து. இவரது மகன் வேல்முருகன் (25). 2017ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த இவர், ஜம்மு காஷ்மீர் பகுதியில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 1ஆம் தேதி வேல்முருகன் விடுப்பில், தனது சொந்த ஊரான வெம்பூர் கிராமத்திற்கு வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (அக்.16) இரவு வேல்முருகன் தூங்குவதற்காக வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்றுள்ளார். நள்ளிரவு ஒரு மணி அளவில் ரத்தக் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் மாடியில் இருந்து இறங்கி, வீட்டிற்குள் வந்த வேல்முருகனை பார்த்த அவரது தாய் பாக்கியலட்சுமி, சகோதரி முருகவள்ளி ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர், சிறிது நேரத்தில் வேல்முருகன் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். பின்னர், இது குறித்து மாசார்பட்டி இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமது மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ராணுவ வீரர் வேல்முருகனின் உடலைக் கைப்பற்றி, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், வேல்முருகனின் தாயார் பாக்கியலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், கொலை குறித்து மாசார்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வெம்பூர் நடுத்தெருவைச் சேர்ந்த மாரிச்சாமி (29) (திருமணம் ஆகாதவர்) என்பவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த 32 வயது பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
திருமணத்தை மீறிய உறவு: இந்த நிலையில், ராணுவத்தில் பணியாற்றி வந்த வேல்முருகன் விடுப்பில் ஊருக்கு வந்தபோது, அந்த பெண்ணுடன் வேல்முருகனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஊருக்கு வரும்போது வேல்முருகனும், அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதை அறிந்து மாரிச்சாமி, வேல்முருகனை கண்டித்துள்ளார். ஆனாலும், வேல்முருகன் அதனை கண்டு கொள்ளாமல், அந்தப் பெண்ணுடன் பழகி வந்தாக தெரிய வந்துள்ளது.
இதனால் மாரிச்சாமிக்கும், வேல்முருகனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு வேல்முருகன் மொட்டை மாடிக்குச் சென்று தூங்குவதை மாரிச்சாமி நோட்டமிட்டுள்ளார். அப்போது, மாரிச்சாமி, நள்ளிரவு ஒரு மணியளவில் மொட்டை மாடிக்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்த வேல்முருகனை சரமாரியாக கத்தியால் குத்தி, பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த மாரிச்சாமியை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தூத்துக்குடி சிறையில் அடைத்தனர். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ இந்த கொலை வழக்கு சம்பந்தமாக உண்மைக்குப் புறமான செய்தி, வீடியோ, ஆடியோ போன்றவற்றை வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டாம்.
மேலும் வழக்கின் புலன் விசாரணை பாதிக்கும் வகையில், சட்டத்தை மீறி உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: விழுப்புரத்தில் பிரபல வணிக நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!