தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டார். பின்னர் அவர் பேசுகையில்," மு.க ஸ்டாலின் என்றுமே கனவு முதலமைச்சர்தான். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஆட்சிக்கும் கட்சிக்கும் பல்வேறு சோதனைகள் வந்தாலும் அசைக்க முடியாத ஆட்சியாக அதிமுக அரசு உள்ளது. ஜெயலலிதாவின் கனவினை நனவாக்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றியுள்ளார்" என்றார்.
இதைத் தொடர்ந்து, நடிகையும் அதிமுக பேச்சாளருமான விந்தியா பேசுகையில், "திமுக குடும்பம் கொரோனோ வைரஸ்ஸை விட ஆபத்தானது. கொரோனோ வைரஸுக்கு கூட மருந்து கண்டுபிடித்து விடலாம். ஆனால், மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் கனவு நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியாது.
குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் 2 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கிய திமுக இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது ஏன் கையெழுத்து வாங்கவில்லை. அப்போது, பதவியிலிருந்த திமுக மக்களவை உறுப்பினர்கள் ஏன் ராஜினாமா செய்யவில்லை. அண்ணா கொள்கைக்காக திமுகவை ஆரம்பித்தார். ஆனால், தற்போது திமுக கொள்ளையடிப்பதையே கொள்ளையாக வைத்துள்ளது. 2021 மட்டுமல்ல 2061ஆம் ஆண்டிலும் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது" என்றார்.
இதையும் படிங்க:கப்பலில் உள்ள கணவரை மீட்க வேண்டும் - மனைவி கோரிக்கை!