தூத்துக்குடி கேடிசி நகர் ஹவுஸிங் போர்டு காலனி முல்லை நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (25). இவரது மனைவி நந்தினி (23). இந்தத் தம்பதியருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு செல்வகணேஷ் என்ற ஆறு மாத ஆண் குழந்தை இருந்தது.
கணவர் வேலைக்கு சென்றவுடன், நந்தினி தனது குழந்தையை தாலாட்டி இன்று காலை தொட்டிலில் தூங்கவைத்துள்ளார். இந்நிலையில், சுமார் 12.30 மணியளவில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை மாயமானதைக் கண்டு நந்தினி அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், குழந்தையை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தபோது அருகிலிருந்த உறை கிணற்றில் குழந்தை செல்வகணேஷ் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன், கிராமப்புர துணைக் கண்காணிப்பாளர் கலைக்கதிரவன் தலைமையிலான காவல் துறையினர் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நந்தினிக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கும் இடையே சமீபத்தில் தகராறு ஏற்பட்டுள்ளதும், இந்த தகராறில் குழந்தை கொலை செய்யப்பட்டதா? அல்லது முன்விரோதம் காரணமாக யாரேனும் குழந்தையை கடத்தி கொன்றார்களா ? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.
ஆறு மாத ஆண் குழந்தை கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.