தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதுக்கி கொண்டுவரப்படுவதாகத் தூத்துக்குடி வடபாகம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், வடபாகம் காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம் தலைமையிலான காவல் துறையினர் இன்று அதிகாலை திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் கார் ஒன்று அப்பகுதி வழியாக வந்துகொண்டிருந்தது. இதைக் கண்ட காவல் துறையினர் காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் கார் சிறிது தூரம் சென்று நின்றது.
இதைத்தொடர்ந்து, காரில் இருந்தவர்கள் இறங்கி தப்பியோடிவிட்டனர். பின்னர் காவல் துறையினர் காரை சோதனையிட்டபோது காரில் 150 கிலோ கடல் அட்டைகளை ஐந்து நெகிழி டிரம்களில் மறைத்து கடத்திவந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, கடல் அட்டைகளையும், காரையும் பறிமுதல்செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். மேலும் இது தொடர்பாக கடல் அட்டைகளை கடத்திவந்தது யார்? எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: