வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் தூத்துக்குடியில் நேற்று மாலை முதல் கனமழை பெய்ய தொடங்கியது. இரவு பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்ததால் அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி நின்றது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக பெய்த கனமழையின் காரணமாக தேங்கியிருந்த மழை வெள்ளநீரே வடியாத நிலையில் நேற்று இரவு முழுவதும் பெய்த மழையால் மேலும் நீர் அதிகரித்து வீடுகளுக்குள் புகுந்தது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. உப்பளங்களில் தண்ணீர் தேங்கியதால் உப்பு உற்பத்தியை பாதிப்படைந்துள்ளது.
குறிப்பாக முத்தையாபுரம் அருகேயுள்ள சூசை நகர் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்துள்ளதால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மாற்று இடத்திற்கு சென்றதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படைந்து குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "முத்தையாபுரம், சூசை நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் உப்பளத்தில் வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். நேற்று பெய்த மழை வெள்ளம் வீட்டிற்குள் புகுந்ததால், வீட்டை விட்டு வெளியேறி அகதியை போல் வாழ்கிறோம். ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம்.
தங்களது குடியிருப்புக்குள் புகுந்த வெள்ள நீரை வெளியேற்ற மாநகாரட்சி அலுவலர்களிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது வேதனையளிக்கிறது. உடனடியாக மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் அடுத்த கட்டமாக போராட்டம் நடத்தும் சூழல் உருவாகும்" என்றனர்.
இதையும் படிங்க: வீட்டிற்கு அனுப்ப பணமில்லை... கஞ்சா விற்பனையை கையிலெடுத்த மூவர் கைது!