தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாம் ஆண்டு புத்தகத் திருவிழா கடந்த ஐந்தாம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கண்காட்சி நாளைமறுநாள் வரை நடைபெறுகிறது. இதனையொட்டி, பிரபலங்கள், கவிஞர்கள், சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள், போட்டித் தேர்வுகள் மற்றும் சிறுவர் சிறுமியர்களுக்கான புத்தகங்கள் உள்பட பல்வேறு வகையான புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
புத்தகத் திருவிழாவின் 6ஆம் நாளான நேற்று சுமார் 2000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது ஆசிரியர்களுடன் வந்து, தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றனர். பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில், கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்கம், எழுத்தாளர்களின் சொற்பொழிவுகள், இலவச பேருந்து வசதி உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாணவ, மாணவிகள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இக்கண்காட்சியில் சலுகை விலையில் புத்தகங்கள் கிடைப்பதோடு மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது இதனை ஆண்டுதோறும் தொடர வேண்டும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
மாணவர்களைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியை தமிழ்செல்வி கூறுகையில், 'இந்த புத்தகத் திருவிழாவில் மாணாக்கர்களுக்கு மட்டுமல்லாது ஆசிரியர்களுக்குத் தேவையான புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன. கணிதம் சம்பந்தமான புத்தகங்கள் இன்னும் அதிக அளவில் இடம் பெற்றிருந்தால் மிகவும் உதவிகரமாக இருந்திருக்கும். மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது' என்றார்.
புத்தக விற்பனை குறித்து அரங்கு விற்பனையாளர் கூறுகையில், புத்தகக் கண்காட்சியில் 2ரூபாய் முதல் 800 ரூபாய் வரையிலான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் வந்து செல்வதுடன் நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகளவில் பொதுமக்கள்வரவேற்பளித்துள்ளது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.
கடந்த நான்கு நாட்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களைவாங்கிச் சென்றுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.