தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கு காரணமாக கோயில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டன.
அதேவேளையில் கோயில்களை திறந்து அந்தந்தப் பணியாளர்கள் மட்டும் சென்று ஆகம விதிப்படி, வழக்கமான பூஜைகளை செய்து வந்தனர். வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்து வந்தனர்.
ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இன்று (ஜூலை.5) முதல் தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் உள்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் முழுமையாக திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோயிலில் 70 நாள்களுக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
முகக்கவசம் அணிந்துவரும் பக்தர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, கைகளில் கிருமிநாசினியும் தெளிக்கப்படுகிறது.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். கடலில் புனித நீராட அனுமதியளிக்கப்படவில்லை.
இதனிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு நேரில் சென்று காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தலைமையில் மூன்று காவல் ஆய்வாளர்கள், 100க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
மேலும் பொதுமக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்லவோ, பழம் தேங்காய் உடைக்கவோ அனுமதியில்லை. காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கபடுவார்கள். தரிசனம் செய்ய வரும் பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் போன்ற கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.