கடந்த 2018ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு, அரசாணை பிறப்பித்து ஸ்டெர்லைட் ஆலையை மூடியது.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர் நீத்தோருக்கு அஞ்சலி!
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் மூன்றாமாண்டு நினைவு தினம் இன்று (மே.22) அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க கூட்டமைப்பு சார்பில், இந்த முறை ஆலைக்கு எதிராக போராட்டத்தைத் தொடங்கிய அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் இன்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மகேஷ் தலைமையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து, உயிரிழந்தோர் புகைப்படங்களுக்கு மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.
இது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் மகேஷ்,’மூன்று ஆண்டுகளாகியும் இந்த கொடுஞ்செயலுக்கான நீதி எங்களுக்கு கிடைக்கவில்லை. எப்போது ஸ்டெர்லைட் ஆலையின் அடிக்கற்கள் அகற்றப்படுமோ அன்று தான் எங்கள் மக்களும், போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் ஆத்மாவும் மகிழ்ச்சியடையும். அதுவரை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும்.
காவல் துறை மீது நடவடிக்கை
தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி, பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கியது வரவேற்கத்தக்கது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்றி ஆலையை அகற்ற வேண்டும்,. இந்த சம்பவத்திற்கு காரணமான காவல் துறையினர் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. துப்பாக்கி சூட்டுக்கு காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். எதிர்ப்பாளர்கள் மீது சிபிஐ சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
இது போல தூத்துக்குடியில் பாத்திமா நகர், லெவிஞ்சிபுரம், சிதம்பர நகர், திரேஸ்புரம் உள்ளிட்ட இடங்களில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க போராட்ட ஒருங்கிணைப்பாளர்களான பாத்திமா பாபு, கிருஷ்ணமூர்த்தி, மெரினா பிரபு, ரீகன், கெபிஸ்டன் ஆகியோரின் தலைமையில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.