தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள எஸ்.குமாரபுரம் கிராமத்தில் கடந்த மாதம் 7 ஆம் தேதி காளியம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது. இந்த கொடை விழாவில் இடம் பெற்ற ஆடல், பாடல் நிகழ்ச்சியில், பாம்பு பிடி வீரர் மூலம் நல்லபாம்பு வித்தையும் காண்பிக்கப்பட்டது.
இதனை கோயில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர் தனது தொலைபேசியில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதால் தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிஷேக்தோமர், கோயில் திருவிழாவில் நல்லபாம்பு மூலம் வித்தை காட்டியவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வன அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, தூத்துக்குடி வனச் சரக அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில், கோயில் திருவிழா நடந்த எஸ்.குமாரபுரம் கிராமத்திற்குச் சென்று கோயில் கமிட்டி நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பாம்பு வித்தை காட்டியவர், மதுரை ஆளவந்தன் பகுதியைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் மகன் ராஜேஷ்குமார் (46) என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இவர் இது போன்ற கோயில் திருவிழாக்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பாம்புகளை வைத்து வித்தை காட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து மதுரையில் ஒரு கலை நிகழ்ச்சியில் பாம்புகளை வைத்து வித்தை காட்டி கொண்டிருந்தபோது ராஜேஷ்குமாரை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜேஷ்குமார், பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் கோயில் திருவிழாக்களின் கலைநிகழ்ச்சிகளில் நல்லபாம்பை பிடித்து வந்து வித்தை காட்டும் செயலில் ஈடுபட மாட்டேன் என்றும், ராஜேஷ்குமார் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அதேநேரம் மீதமுள்ள பாம்புகளை மீட்டு காட்டுப்பகுதியில் விட உள்ளதாக வன அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: எக்ஸ்பிரஸ் ரயிலில் பாம்பு - பயணிகள் பீதி!