தூத்துக்குடி கருப்பட்டி சொசைட்டி அருகே மாநகராட்சியின் சார்பில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பொழுதுபோக்கு பூங்காவில் சிறுவர்களுக்கான சறுக்கு விளையாட்டு உபகரணங்களுடன், முதியோர்கள் இளைப்பாறும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பூங்காவினுள் நிழல் தரும் வகையில் வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை முதலே வேப்பமரத்திலிருந்து திடீரென பால் நுரை நுரையாக பொங்கி வழிந்தது. இதுபற்றி தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள், வேப்ப மரத்திலிருந்து பால் வடிவதை பார்க்க பெருந்திரளாக திரண்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வேப்ப மரத்தை சுற்றி நின்று பால் வருவதை பார்த்து ரசித்தனர். சிலர் வேப்ப மரத்திலிருந்து பால் வடிவதை தங்களது செல்போன்களில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர்.
மேலும் சிலர் வேப்ப மரத்திலிருந்து வடியும் பாலை தேங்காய் ஓடு மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்களில் பிடித்து குடித்தனர். காட்டுத்தீயாய் பரவிய இந்த தகவலைத் தொடர்ந்து சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் இப்பகுதிக்கு பொதுமக்கள் வந்து வேப்ப மரத்திலிருந்து பால் வடிவதை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
இதுகுறித்து பொதுமக்களில் ஒருவர் கூறுகையில், வேப்பமரத்தில் வேறு ஏதோ சக்தி இருப்பதால்தான் பால் வடிவதாக கருதுகின்றனர். இந்த பால் சர்க்கரை வியாதிக்கு மருந்து என்று சொல்லப்படுவதால் நானும் இந்தப் பாலை டம்ளர்களில் பிடித்து குடித்தேன் என்றார்.
இதையும் படிங்க: பகவதி அம்மன் கோயில் உண்டியலில் ரூ. 27 லட்சம் வசூல்