தூத்துக்குடி மாவட்டம் புதுகிராமத்தில் தேர்தல் வாக்குப்பதிவின் போது அதிமுக நிர்வாகி ஆரோக்கியத்தின் இரு சக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து எரித்து சென்றனர். பின் சம்பவ இடத்திற்கு சென்ற அமைச்சர் கடம்பூர் ராஜு தனது சொந்த நிதியிலிருந்து புதிய வாகனம் பெற்றுத் தர ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று (ஏப்ரல் 29) அமைச்சர் கடம்பூர் ராஜு,அதிமுக நிர்வாகி ஆரோக்கியத்திற்கு, புதிய இருசக்கர வாகனத்தினை பரிசாக வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டிலும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் தேர்தல் முடிவுகள் எண்ணப்படும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்ல கட்சி வேட்பாளர்கள், முகவர்களுக்கு தேர்தல் ஆணையம் பல விதிமுறைகளை அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் வேட்பாளர்களின் முகவர்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இதை அனைத்து கட்சிகளும் கடைப்பிடிக்கும், நாங்களும் கடைபிடிப்போம். அதேபோல் தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவு கொண்டாட்டத்தில் ஈடுபட தடை விதித்துள்ளது. அதை கண்டிப்பாக நாங்கள் பின்பற்றுவோம் என்றார்.
ஸ்டெர்லைட் தொடர்பான கேள்விக்கு அமைச்சர் கூறுகையில், "கரோனா இரண்டாம் அலையானது அதிகரித்து வருவதால் காலத்தின் கட்டாயத்தின் காரணமாக தான் இதனை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையானது ஆக்சிஸன் உற்பத்திக்கு மட்டுமே திறக்கப்படுகிறது. இது அரசு எடுத்த முடிவு அல்ல. அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு. அதை உச்ச நீதிமன்றத்தில் அரசு சார்பாக வைக்கப்பட்டது. மேலும் இது உச்சநீதிமன்றம் எடுக்கப்பட்ட முடிவு. பழைய நினைவுகளை தவறாக புரிந்துகொண்டு சில பேர் போராடுகின்றனர். நிலைமையை பற்றி சொன்னதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்" எனக் கூறினார்.