தூத்துக்குடி: பிரதமர் நரேந்திர மோடி, திருநெல்வேலி ரயில் நிலையத்தில், நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை இன்று (செப். 24) காணொலி காட்சி வாயிலாக காலை 11:30 மணியளவில் தொடங்கி வைக்க இருக்கிறார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார்.
விமர்சிப்பதே வேலை: அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "நாடு வேகமாக முன்னேறுகிறது. அதைப் பற்றி தவறு சொல்ல வேண்டும் என்பதற்காக மோடி ஒன்பது ஆண்டுகாலம் எதையுமே செய்யவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கடுமையான குடிநீர் பஞ்சம் தென் பகுதியில் ஏற்பட்டுள்ளது. சபாநாயகர் தொகுதியில் மிகக் கடுமையான தண்ணீர் பஞ்சம் இருப்பதாகக் கேள்விபட்டேன்.
வீடு தோறும் குடிநீர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மோடி கொண்டு வந்து இருக்கிறார். மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை மாநில அரசு செயல்படுத்த வேண்டும்" என்றார். அமைச்சர் கீதாஜீவன் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வரும்.. ஆனால் வராது என்று கூறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "33% மகளிர் இட ஒதுக்கீடு எங்களை பொறுத்த அளவிற்க வரும்.
இடஒதுக்கீடு 2029ல் வரும்: அவர்களை பொறுத்த அளவிற்கு வராது. அவர்கள் நெகட்டிவாக யோசிக்கிறார்கள். முன்னர் கூட்டணி ஆட்சியில் அதிக பெரும்பான்மையாக இருந்தார்கள். ஆனால் கொண்டு வர முடியவில்லை. தற்போது பிரதமர் மோடி ஆட்சியில் கொண்டு வரப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுத்து 2028 அல்லது 29ல் வரும். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு அவர்கள் இப்படி பேச கூடாது. 33% இட ஒதுக்கீட்டு மூலம் பல பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
பெண்ணாக வரவேற்போம்: மற்ற பெண்களுக்கு இட ஒதுக்கீடு ஒதுக்கும் போது அவர்களுக்கு எப்படி பிடிக்கும்? பெண்கள் அரசியலில் இருப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கிறதே என்று பெண்ணாக இருந்து முதலில் வரவேற்போம். அதற்கு அப்புறம் விமர்சிப்போம். இதுதான் இங்கு உள்ள பிரச்சினையாக உள்ளது. நல்லது செய்தாலும் வரவேற்பது கிடையாது. இது மிகப்பெரிய சமுதாயப் புரட்சி 13 பேர் நாடாளுமன்றத்தில் உறுப்பினராகவும், 77 பேர் சட்டமன்றத்தில் உறுப்பினராகவும் இருக்க போகிறார்கள்.
வரும்.. ஆனா வராது: சிறிய மாநிலம் புதுச்சேரியில் 13 பெண் எம்.எல்.ஏக்கள் உட்காரப் போகிறார்கள்" என்றார். காவிரி நீர் குறித்து பேசிய அவர், "காவிரி நீர் வரும், ஆனால் வராது. தற்போது காங்கிரஸ் கூட்டணியில் தானே உள்ளனர். பேச்சுவார்த்தை நடத்தி கொண்டுவர வேண்டியது தானே. ஒன்பது வருடமாக நாடு பொருளாதாரத்தில் முன்னேறி உள்ளது. சென்னையில் ஒரு இசை கச்சேரியை (ஏ.ஆர். ரகுமான் கான்சர்ட் பிரச்சினை) கூட இவர்களால் கட்டுப்படுத்தப்படுத்த முடியவில்லை. ஆனால் டெல்லியில் மிகச்சிறப்பாக ஜி20 மாநாடு நடத்தினோம்" என்று கூறினார்.
ஊழல் இல்லாத ஆட்சி: சிஏஜி அறிக்கை பற்றி பேசிய தமிழிசை, "2015 இல் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டால் 2023 முடிவடையும். திட்டம் என்று வரும் போது, அது முடிவடைய எட்டு ஆண்டுகள் ஆகும். இது தான் எதார்த்தமான உண்மை. மோடி ஊழல் இல்லாத ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கிறார் என்பது உலகத்துக்கே தெரியும்" என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முறைகேடுகள் அரங்கேறி இருப்பது உண்மைதான் - நாராயணன் திருப்பதி