தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையான நேற்றும் (ஜனவரி 14) கனமழை தொடர்ந்ததால், பொங்கல் திருநாளை பொதுமக்கள் கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டது.
இடைவிடாது பெய்த மழையின் காரணமாக பிரையண்ட் நகர், ஹவுசிங் போர்டு காலனி, ரஹ்மத் நகர், சூசை நகர், லூர்தம்மாள் புறம், தபால்தந்தி காலனி உள்பட பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குடியிருப்புக்குள் சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்றக் கோரி ஹவுசிங் போர்டு காலனி, பிரையண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவலறிந்து சம்பவ இடம் சென்ற காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், குடியிருப்புக்குள் சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து, அங்கிருந்து பொதுமக்கள் கலைந்துச் சென்றனர். இதனிடையே, மாநகராட்சியில் வெள்ளம் சூழ்ந்த இடங்களை ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை ஸ்ரீவைகுண்டத்தில் அதிகபட்சமாக 51 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் தூத்துக்குடியில், 40 மி.மீ., மழையும் திருச்செந்தூரில் 39 மி.மீ., மழையும் பதிவாகி உள்ளது.