தூத்துக்குடி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, மூன்று நாள் பயணமாக நேற்று (டிசம்பர் 13) விமானம் மூலமாக தூத்துக்குடி சென்றடைந்தார்.
பின்னர் கோவில்பட்டி அருகேயுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் மகாகவி பாரதியார் பிறந்த ஊரான எட்டயபுரத்திற்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, அவரது மனைவி லெட்சுமி ரவி ஆகியோர் வருகைதந்தனர்.
அப்போது பாரதியார் மணிமண்டபத்தில் ஆளுநர், அவரது மனைவிக்கு மகாகவி பாரதியார் வேடமணிந்த குழந்தைகள் பாரதியார் பாடல்களைப் பாடி வரவேற்பு அளித்தனர். அந்தப் பாடல்களைக் கேட்ட பின்னர் 'ரொம்ப சந்தோஷம்' என்று ஆர்.என். ரவி கூறியது மட்டுமின்றி, குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள பாரதியார் உருவச் சிலைக்கு ஆர்.என். ரவி, அவரது மனைவி இருவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மணிமண்டபத்தில் உள்ள புகைப்படங்களையும் பார்வையிட்டனர்.
இதற்கிடையில் வருகைப் பதிவேடு புத்தகத்தில் மகாகவி பாரதியார் தனது கருத்தினை ஆங்கிலத்தில் பதிவுசெய்த ஆர்.என். ரவி தனது கையெழுத்தினை மட்டும் இந்தியில் இட்டுள்ளார்.
முன்னதாக பாரதியார் இல்லத்திற்குச் சென்று அங்குள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. இதில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.