1971ஆம் ஆண்டு இந்தியா -பாகிஸ்தானுக்குமிடையே நடைபெற்ற போரின்போது கடல் வழியே தாக்க முயன்ற பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான பி.என்.எஸ். கைபர் போர் கப்பல் உள்பட 4 பாகிஸ்தான் கடற்படை கப்பல்களை இந்திய கடற்படையினர் மூழ்கடித்தனர். இந்த போரில் இந்தியா வெற்றியடைந்தது. இந்த வெற்றியின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி கடற்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையொட்டி நடைபெறும் விழாவில் போர்க்கப்பல்களின் செயல்பாடுகள், கடற்படை சாதனைகள், வலிமை மற்றும் பணி அர்ப்பணிப்பு ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் போர்க்கப்பல்களை பார்வையிடுவதற்கு அனுமதி அளிக்கப்படும். அதன் ஒரு பகுதியாக இந்திய கடற்படைக்கு சொந்தமான "p58 சுமேதா" எனும் கடற்படை ரோந்து போர் கப்பல் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு வந்தது.
இந்த போர்க்கப்பலை பார்வையிடுவதற்காக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இன்று அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விளாத்திக்குளம், கோவில்பட்டி, ஈராட்சி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்தும் 3,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களது ஆசிரியர்களுடன் போர்க்கப்பலை கண்டு களித்தனர்.
போர்க்கப்பலின் செயல்பாடுகள், பணி, அதிகாரிகள் பணி, போர் காலங்களில் பயன்படுத்தும் சாதனங்கள், தற்காப்பு உபகரணங்கள், அதன் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு கடற்படை அலுவலர்கள் விளக்கமளித்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய கடற்படை நிகழ்த்திய சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சிகளை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
போர்க்கப்பல்களை பார்வையிட்ட அனுபவம் குறித்து பள்ளி மாணவ மாணவிகளிடம் கேட்டபொழுது, "கடற்படையினர் எங்களுக்கு நல்ல முறையில் விளக்கமளித்தனர். ரோந்து கப்பலின் பணி, கப்பலை இயக்குவதற்கான சாதனங்கள், அது எவ்வாறு இயங்குகிறது, எந்திர துப்பாக்கி செயல்படும் விதம் அனைத்தையும் தெளிவாக கேட்டறிந்தோம்.
இது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. கடற்படை செயல்பாடுகளை பார்க்கையில் பிற்காலத்தில் நாங்களும் கடற்படையில் அலுவலராக வரவேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது" என்றனர்.
இதையும் படிங்க: பயணியின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே காவலர்: குவியும் பாராட்டுகள்!