தூத்துக்குடி: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 30க்கும் மேற்பட்ட மாணவர்களை முறைகேடாக சேர்த்த விவகாரம் தொடர்பாக முந்தைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்பட அடுத்தடுத்து அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இது தற்போது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக, தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியயை பாத்திமா ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “மீன்வள பல்கலைக்கழக முறைகேடு சம்பவம் பேசும் பெருளாக மாறி உள்ளது. இது ஒன்றும் கல்வி நிறுவனங்களில் தற்போது வந்த விஷயம் அல்ல. சில காலமாக இந்த சம்பவம் போய்க்கொண்டுதான் உள்ளது. தனிப்பட்ட தனிநபரின் புகாரின் காரணமாக இன்றைக்கு பேசும் பொருளாக மாறி உள்ளது.
அரசு விசாரணை செய்து கொண்டிருக்கிறது. மீன்வளத்துறை பல்கலைக்கழகமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது. தற்போது இரண்டு அலுவலர்கள் பணி இடைநீக்கம் செய்திருக்கிறார்கள். பணியிடை நீக்கம் என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது. இந்த மாதிரியான நடக்கும் சம்பவத்தின் பின்னால் பெரும்புள்ளிகள் கூட இருப்பார்கள். ஆனால், கடை நிலைகளில் உள்ள இரண்டு பேரை பலிகிடாவாக்கி அவர்களை காலி பண்ணி தப்பித்துக் கொள்ளும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இந்த இரண்டு விசாரணை குழுக்களும் கூறியது என்னவென்றால், தயவு தாட்சினமின்றி தண்டித்திட வேண்டும் என்று இருப்பதாக கேள்விப்படுகின்றோம். குற்றவாளிகள் யார், பெற்றவர்களை பொறுத்தவரை எவ்வளவு செலவு செய்தாலும் சீட் வாங்கி கொடுப்பேன் என்று கூறுவார்கள். இது மிகப்பெரிய ஒரு குற்றச் செயல்.
ஒரு தகுதியுள்ள குழந்தைக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை பண பலத்தால் இவர்கள் தட்டி பறித்து விடுகிறார்கள். இது எந்த வகையில் நியாயம்? இந்த மாதிரி சீட்டு வாங்கும் குழந்தைகள் என்ன தப்பு செய்தாலும் நாம் நினைத்ததை சாதித்துக் கொள்ளலாம் என்று நினைக்கும்.
2047 நம் நாடு வளர்ந்த விட்ட வரிசையில் வந்து விடுவோம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், இந்த மாதிரி நினைப்பது நடக்கனும் என்றால், இந்த ஊழல், இந்த புதைக் குழியில் புதைந்து கிடக்கின்ற இந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டும். சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும்” என்றார்.
மேலும் இது குறித்து சமூக ஆர்வலர் இருதயராஜ் மஸ்கரனா கூறுகையில், “கடந்த ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளால் தகுதி இல்லாத மாணவர்களுக்கு பணத்தை வாங்கிக் கொண்டு இட ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். இதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டு வருகின்றனர். இந்த ஆட்சியில் அரசு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து தகுதியுள்ள மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
மீனவர்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர். எந்த வித வருமானமும் இல்லாமல் எந்த வித தொழில் இல்லாமல் இருக்கின்ற காலகட்டத்தில், இந்த கல்லூரியில் படிக்கக் கூடிய மாணவருடைய முயற்சியினால் அந்த குடும்பம் வாழ்வடையும். ஆகவே, அரசு தலையிட்டு யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தகுதியுள்ள மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்றார்.