தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய தூப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணை அடிப்படையில் தமிழ்நாடு அரசு வேலையும், நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது.
இதையடுத்து அரசு வழங்கிய இந்த இழப்பீட்டில், கல்வித் தகுதியின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலை கலவரத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட வேலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அத்துடன் கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
இது குறித்து பாதிக்கப்படவரின் தாய் கூறியதாவது:
2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து, எனது மகன் கலவரத்தில் குண்டடி காயம்பட்டு கை கால்களில் முறிவு ஏற்பட்டது. 80 விழுக்காடு ஊனத்துடன் தற்போது எனது மகன் உயிரோடு உள்ளார். அவருக்கு அரசு, தலையாரி பணி வழங்கியுள்ளது.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர் இழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குகையில் கல்வித் தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில், ஏதோ ஒரு அரசு வேலை வழங்க வேண்டும் என தலையாரி வேலையை வழங்கியுள்ளனர்.
சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 80 விழுக்காடு ஊனம் உள்ள எனது மகனுக்கு தலையாரி பணி வழங்கியுள்ளனர். இதுதவிர போராட்டத்தில் சிறு காயம்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.5 லட்சம் இழப்பீடே எங்களுக்கும் வழங்கப்பட்டது.
ஆனால் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவிக்கையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட இழப்பீடுகள் தொகைக்கு நிகராக வழங்க நடவடிக்கை எடுப்பதாக உத்திரவாதம் அளித்தார். இருப்பினும் இதுவரை இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊனத்துடன் இருக்கும் எனது மகனை பராமரிப்பதற்கு எங்களுடைய வருமானமும் போதவில்லை.
எனவே ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் உறவினர்களுக்கு வழங்கப்பட்ட வேலையை அரசு மறுபரிசீலனை செய்து, கல்வித் தகுதியின் அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணிக்கு குறையாமல் அரசு வேலை வழங்கிட ஆவண செய்ய வேண்டும். எனது மகனின் மருத்துவ செலவு முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து அவதூறு: நாம் தமிழர் பிரமுகரை முற்றுகையிட்ட கிராம மக்கள்!