தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை (காப்பர் உற்பத்தி) நிரந்தரமாக மூட வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். 100வது நாள் போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்ட நிலையில் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர்.
மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், தமிழக அரசின் முடிவு சரியானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இதனையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனம் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கின் விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் அறிக்கை ஒன்றை இன்று (ஆகஸ்ட் 21) வெளியிட்டனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் ஒப்புதலுக்கு இணங்க அவ்வப்போது புதுப்பித்து செயல்பட்டு வந்தது. கடந்த 22 ஆண்டுகளாக ஆலையின் சுற்றுச்சூழல் செயல்பாடுகளை தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்துள்ளது.
அதில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையின் செயல்முறைகள், தொழில்நுட்பங்கள் பொருந்தக்கூடிய ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின் கட்டமைப்புக்குள் செயல்படுவதை உறுதி செய்துள்ளது. எனவே, நீதித்துறை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இறுதி விசாரணைக்காகக் காத்திருக்கிறோம்" என குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சை - ரூ.5 லட்சம் வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு