தூத்துக்குடி மாவட்டத்தில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த வேதாந்தாவின் ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு காவல் துறையினர் கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியது.
இது குறித்து நமது ஈடிவி பாரத் செய்திகளிடம் பேசிய ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் இறந்த பள்ளி மாணவி ஸ்னோலினுடைய தாயார் வனிதா, “துப்பாக்கிச் சூட்டில் எனது மகள் இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அவளுடைய நினைவை அனுசரிக்கும் வகையில் அவளது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைக்குச் சென்று வழிபாடு நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் கல்லறைக்குச் சென்று வழிபடுவதற்கு கூட காவல் துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். ஆதார் அடையாள அட்டையைக் காண்பித்துவிட்டுத்தான் கல்லறைக்குச் செல்ல வேண்டும் எனக் கூறுகின்றனர். இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்த மண்ணுக்காகவும், மக்களின் வாழ்வுக்காகவும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர்நீத்த எனது மகளை கல்லறையில் சென்று பார்ப்பதற்கு கூட அனுமதி பெற்றுவிட்டுத்தான் செல்ல வேண்டுமா? வன்முறையை எந்த வகையிலும் தூண்டிவிடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக காவல் துறையினர் கூறுகின்றனர். ஆனால் அமைதியான முறையில் அஞ்சலி செலுத்த நினைக்கும் எங்களைக் காவல் துறை தடுப்பதன் மூலம் வன்முறையை அவர்கள்தான் செய்ய தூண்டுகின்றனர்.
காயம்பட்ட எங்களின் மீது மேலும் அழுத்தத்தைத் திணிக்கும்போதுதான் வன்முறை உருவாகிறது. ஸ்டெர்லைட் போராட்டம் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகின்றன. ஆனால் இதுவரை அந்த துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உயிரிழந்தவர்களை வைத்து எந்த அசாம்பாவிதமும் அதன்பிறகு நடக்கவில்லை. ஆனாலும் இவ்வளவு கெடுபிடிகள் விதித்திருப்பது வருத்தமளிக்கிறது. இந்த விஷயத்தில் எங்களுக்கு நீதி இன்னமும் கிடைக்கவில்லை” என வேதனையோடு தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் வேண்டுகோளின்படி, தூத்துக்குடி மக்கள் தங்கள் சட்டைகளில் கறுப்பு பேட்ஜ் அணிந்தும், கறுப்பு முகக்கவசம் அணிந்தும், வீடுகளில் எதிர்ப்புக் கோலமிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் மீது பொய் வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி ஊர்மக்கள் உண்ணாவிரதம்