ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, "ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களின் மீது காவல் துறையின் அடக்குமுறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தனியார் இடத்தில் சந்தித்து கூட்டம் நடத்தவோ, கருத்துகளை பரிமாறுவதற்கோ, ஆலோசனை நடத்துவதற்கோ காவல் துறையின் அனுமதி பெற வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.
இது அரசியல் அமைப்பு சட்டம் ஒன்பதாவது அட்டவணையை மீறுவதாக உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் ஸ்டெர்லைட் கலவரம் குறித்து விசாரணை நடத்தும் சிபிஐ அமைப்பு மீதும், ஒரு நபர் ஆணையம் மீதும், எதன் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறோம். தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஸ்டெர்லைட் வழக்கை முடக்கியதற்கு காரணம் என்னவென்று தெரியாது. ஆனால் தற்போது அதன் மீது விமர்சனம் வைப்பதற்கோ அதுபற்றி கருத்து கூறுவது தேவையில்லை. நாங்கள் எல்லாவற்றையுமே சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் நிலைதான் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.