கரோனா வைரஸ் தொற்றால் பலதரப்பட்ட மக்களும் தங்களின் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு காலத்தில் வருவாய் இல்லாததால் நலிவடைந்துள்ள நிலையில் மக்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் இலவச உணவு பொருள்களை கொடுத்து உதவி வருகிறது.
இதேபோல் ஆங்காங்கே தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியினை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி புனித லசால் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக கரோனாவால் வாழ்விழந்த மக்களுக்கு அரிசி,பருப்பு, காய்கறி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன. பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் இருதயராஜ் மஸ்கர்னா தலைமை தாங்கினார்.
பள்ளி தாளாளர் சேவியர் முன்னிலை வகித்து பயனாளிகளுக்கு அரிசி, காய்கறிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இதுகுறித்து முன்னாள் மாணவர் சங்கத்தினர் கூறுகையில், லசால் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் கரோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ச்சியாக பல உதவிகள் செய்யப்படுகின்றன. அதன் அடிப்படையில் இன்றும் உதவிகள் செய்யப்படுகின்றன. இந்த செயல்பாடு தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்றார்.