தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஸ்டேட் பாங்க் காலனியில் நீண்ட நேரமாக ஒரு கார் நிற்பதாக வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து வடக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரை ஆய்வு செய்தபோது காரில் இறந்த நிலையில் ஒரு பெண் வெட்டி கொலை செய்யப்பட்டுக் கொண்டு வந்திருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, கொலை செய்யப்பட்ட பெண் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சக்தி விநாயகபுரத்தைச் சேர்ந்த கலைச்செல்வி (67). இவரது கணவர் அந்தோணி பிச்சை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். கலைச் செல்விக்கு இரண்டு ஆண், ஒரு பெண் குழந்தை என மூன்று பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
மூத்த மகன் அந்தோணி பெரிசன் திருமணம் ஆகி சென்னையில் வசித்து வருகிறார். இரண்டாவது மகன் ரூபேசன் (40) திருமணம் ஆகி தூத்துக்குடி அந்தோனியார் புரத்தில் மனைவி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரூ.4 லட்சம் செலவு செய்து கலைச்செல்வி தனது வீட்டின் மாடியில் ரூம் எடுத்துள்ளார்.
கடந்த மாதம் 17, 18 ஆகிய இரு தினங்கள் பெய்த கனமழையின் காரணமாக, தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளநீர் சூழ்ந்தது. இதில் ரூபேசன் மனைவி வீடும் தண்ணீரில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ரூபேசன் தனது தாயார் கலைச்செல்வியைத் தொடர்புகொண்டு வீட்டின் மாடியில், தனது குடும்பத்தினருடன் வந்து தங்குவதற்குக் கேட்டுள்ளார். இதற்கு கலைச்செல்வி மறுத்துள்ளார்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சொத்தை தனக்குப் பிரித்துத் தருமாறு பலமுறை தாயாரிடம் கேட்டு வற்புறுத்தி உள்ளார். இதற்கு கலைச்செல்வி மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (ஜன.7) தருவைக்குளத்தைச் சேர்ந்த தனது நண்பர் சூசை அந்தோணி என்பவரை அழைத்துக் கொண்டு காரில், தனது தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு, இருவரும் சேர்ந்து கலைச்செல்வியை வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.
பின்னர், கொலையை மறைப்பதற்காக அவரது உடலை இருவரும் வந்த காரில் ஏற்றி ஸ்டேட் பேங்க் காலனி அருகில் கொண்டு சென்ற போது கொலை செய்தது எப்படியும் போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என நினைத்து ரூபேசன் மற்றும் அவரது நண்பர் சூசை அந்தோணி ஆகிய இருவரும் காரை அங்கேயே நிறுத்திவிட்டுத் தப்பிச்சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து, வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து தகராறில் தாயை மகன் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 47வது சென்னை புத்தகக் கண்காட்சி இன்று நடைபெறாது.. காரணம் என்ன?