தூத்துக்குடி: நகரின் மையப்பகுதியில் உள்ள மாநகராட்சி நிர்வாகத்திற்குட்பட்ட எம்.ஜி.ஆர் பூங்கா அருகில் மயானம் மற்றும் மின் தகன மேடை உள்ளது. இந்த நிலையில், இங்குள்ள கல்லறைத் தோட்டத்தில் ஒரு கல்லறையின் அருகில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது உடல் அருகில் 3 அடி நீளமுள்ள அரிவாள் கிடந்துள்ளது.
இதனைக் கண்ட சிலர் தென்பாகம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே இறந்தவரின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியைச் சேர்ந்த சின்னதுரை என்பது தெரிய வந்தது. மேலும் கட்டிடத் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவியும், 4 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர் குடும்பச் செலவுகளுக்குப் பணம் கொடுக்காமல் தினமும் மது அருந்தி விட்டு, குடும்பத்தாருடன் சண்டை போடுவார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தீபாவளியன்று கணவன் மனைவிக்கிடையே நடந்த தகராறில், தனது மனைவியைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனால் இவரது மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் ஆறுமுகநேரியிலிருந்து கிளம்பி முள்ளக்காடு பகுதியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். அங்கு வந்த சின்னதுரை மீண்டும் குடும்பத்தினரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது 17 வயது மகன், தந்தை சின்னதுரையை இரண்டு நாளாக தேடி வந்துள்ளார்.
இந்த நிலையில், மையவாடி பகுதியில் மது போதையில் மயங்கிக் கிடந்த தந்தையை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் உள்ள இந்த மையவாடி பகுதியில் இது போன்ற கொலைச் சம்பவங்கள் நடப்பது புதிதல்ல. கடந்த 15 நாட்களுக்கு முன்பு பழி தீர்க்கும் நோக்கில், சலவைத் தொழிலாளியின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை.. மனைவி, கள்ளகாதலன் உட்பட 4 பேர் கைது!