தூத்துக்குடி: பாண்டுரங்கன் தெருவை சேர்ந்தவர் சங்கர் ராஜ். இவரது மனைவி மாரீஸ்வரி. இந்த தம்பதிக்கு சார்விக் சரண் (6) என்ற மகன் உள்ளார். மூன்று வயது முதல் மழலையர் பள்ளியில் படித்து வந்த இந்த சிறுவன் கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்ட காரணத்தால் வீட்டில் இருந்து பாடம் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஆறு வயது நிரம்பியதும் சார்விக் சரணை அவனது பெற்றோர் 1ஆம் வகுப்பில் சேர்த்துள்ளனர். ஆனால் கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்காத சூழலில் ஆன்லைன் மூலமாக படித்து வந்துள்ளார்.
இருப்பினும் ஆன்லைன் படிப்பில் ஆர்வம் காட்டாமல் சிறுவன் சார்விக் சரண் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து சிறுவனின் தாயார் மாரீஸ்வரி, அவருக்கு அனைத்து நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் பெயர்களை சொல்லிக் கொடுத்துள்ளார்.
![v](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-02-indian-book-of-record-student-achievement-vis-script-tn10058_19102021100726_1910f_1634618246_318.jpg)
இதை மனதில் வைத்துக் கொண்ட சிறுவன் அனைவரின் பெயர்களையும் எப்போது கேட்டாலும் சொல்லுமளவுக்கு நினைவாற்றலில் சிறந்து விளங்க ஆரம்பித்தார்.
அதுமட்டுமின்றி கந்த சஷ்டி கவசம், மாநிலங்களின் தலைநகர் பெயர்களையும், அறிவியல் பெயர்கள் என அனைத்தையும் சரளமாக கூறும் சார்விக் சரண் நினைவாற்றலை பாராட்டி 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' குழுமம் கேடயம், பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது.
இதுமட்டுமல்லாமல் 'கலாம் வேர்ல்டு ரெக்கார்டு' குழுவினரும் சிறுவனின் சாதனையை பதிவு செய்து, அதிக நினைவாற்றல் உள்ள சிறுவன் என்ற சான்றிதழையும் வழங்கியுள்ளனர்.
சார்விக் சரணின் சாதனையை கவுரவிக்கும் விதமாக சிறுவன் பயின்று வரும் மழலையர் பள்ளி சார்பில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி நிர்வாகத்தினர் சிறுவனைப் பாராட்டி கேடயம், பரிசுகளை வழங்கினர்.
இதையும் படிங்க: இரண்டு வயதில் அபார ஞாபகத் திறன் - சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஆத்மிகா