தமிழ் பத்திரிகை உலகில் முடிசூடா மன்னன் என்று அழைக்கப்பட்ட பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீட்டின் பெயரில் ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவுக்குள்பட்ட வீரபாண்டியபட்டணத்தில் கட்டப்பட்ட மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைத்தார்.
இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் உள்பட அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.
டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்துவைக்க, திருச்செந்தூர் வீரபாண்டியப்பட்டணத்திற்கு வருகைதந்த முதலமைச்சருக்கு வழிநெடுகிலும் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, வீரபாண்டியபட்டணத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி மைய மைதானத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று முதலமைச்சர் சிறப்புரையாற்றினார்.
இதில், சுமார் 2000 பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு திட்டங்களின்கீழ் உதவித்தொகைகள், நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் 180 கிராமங்கள் பயன்பெறும் வகையில் ரூ.180 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையும் பார்க்க: கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் அப்பம் சுட்ட மூதாட்டி