தூத்துக்குடி: தூத்துக்குடியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் இன்று (நவ.25) பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அத்துறையின் அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 18 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளுக்கு மனம், உடல் ரீதியான பாலியல் தொந்தரவு குறித்து புகார் அளிப்பதற்காக 63748-10811 என்ற தனி வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்து அதனை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், "பள்ளி மாணவிகளுக்கு எதிரான குற்றங்கள் போக்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
பாலியல் ரீதியான பிரச்சினை ஏற்படும் போது 1098 என்ற உதவி எண்ணில் புகார் அளிக்கலாம். புகார் அளிக்கும் மாணவியின் பெயர், பெற்றோர் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ரகசியமாக வைக்கப்படும்.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி மாணவிகள் பாலியல் பிரச்சினைகள் குறித்து புகார் அளிப்பதற்கு வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்படும். புகார் அளிப்பவருடைய விவரம் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும். தற்கொலை போன்ற விபரீதமான முடிவுகளை யாரும் எடுக்க வேண்டாம்" எனக் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: எங்களையும் கொஞ்சம் திரும்பி பாருங்க.. வட சென்னை மீனவர்களின் குரல்