தூத்துக்குடி:தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
ஆணையத்தின் முதற்கட்ட விசாரணை
ஏற்கனவே நடந்த 32 கட்ட விசாரணையில் 1,016 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 1,342 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளன.
தற்போது 33-வது கட்ட விசாரணைத் தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அலுவலர் அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 13-ந் தேதி தொடங்கியது.
இதில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது பணியில் இருந்த மாவட்ட ஆட்சியர், பாதுகாப்பு பணியில் இருந்த காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் உயர் அலுவலர்கள் 18 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஒருநபர் ஆணையத்தின் 33வது அமர்வின் முதற்கட்ட விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றது.
இதுதொடர்பாக ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்ட 18 உயர் அலுவலர்களில் 15 பேர் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். இதில் ஒரு ஐ.ஏ.எஸ்., ஒரு காபல் துறை ஐ.ஜி மற்றும் 8 காவல் கண்காணிப்பாளர்கள் அடங்குவர்.
33-வது அமர்வின் இரண்டாம் கட்ட விசாரணை 27-ந்தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெறும். இதில், சம்மன் அனுப்பப்பட்டு ஆஜராகாதவர்கள் ஆணையத்தின் முன்பு விளக்கமளிப்பார்கள். நடிகர் ரஜினிகாந்த் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து குறிப்பிட்டு சில விஷயங்களை கூறியதனால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
எனவே, முன்னாள் முதலமைச்சர் முதல் ஏற்கனவே ஆஜராகி விளக்கமளித்தவர்கள் வரை தேவையென்றால் மட்டுமே விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள். அரசு கொடுத்த காலக்கெடுவுக்குள் ஆணையத்தின் விசாரணையை முடிப்பதற்கு அணைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
இதையும் படிங்க:பள்ளி கட்டிட விபத்தை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு- சட்டப்பேரவை தலைவர் அப்பாவு